வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, December 18, 2014

குறள் நெறிகள் - வள்ளுவம் கூறும் கொல்லாமை










அருள் விளக்கங்கள்:
குறள் நெறிகள்
வள்ளுவம் கூறும் கொல்லாமை என்னும் தலைப்பு

குறள் எண் : 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
விளக்கம் :
அறச்செயல் எது என்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே, அவ்வாறு கொல்லுதல் பிற தீவினைகளை எல்லாம் தானே கொண்டு வரும்.

குறள் எண் : 322
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை.
விளக்கம் :
கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அற நூலோர் தொகுத்து கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாகும்.

குறள் எண் : 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
விளக்கம் :
ஆராயப் புகின், உயிர்களைக் கொல்லாதிருத்தல் ஒப்பற்ற அறமாகும். உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும்.

குறள் எண் : 324
நல்லா றெனப்படுவது யாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி.
விளக்கம் :
நல்லொழுக்கம் எனப்படுவது யாதெனில், எந்த ஓர் உயிரையும் கொல்லாத ஆற்றலைப் போற்றும் நெறியாகும்.

குறள் எண் : 325
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
 விளக்கம் :
கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக்காப்பவன் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் ஆவான்.

குறள் எண் : 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.
விளக்கம் :
கொல்லாமை என்னும் அறவழியில் நிலையாய் வாழும் ஒருவனுடைய வாழ்நாள் மேல் உயிரை உண்ணும் காலனும் (யமன்) செல்லமாட்டான்.

குறள் எண் : 327
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்உயிர் நீக்கும் வினை.
விளக்கம் :
உயிரினங்கள் மூலம் தனக்கு மரண பயம் வந்தாலும், தன்னை காத்துக் கொள்வதற்காக உயிர்களைக் கொல்லலாகாது.

குறள் எண் : 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
விளக்கம் :
உயிரினங்களைக் கொல்வதால் செல்வம் சேர ஒரு வேளை வாய்ப்பு இருக்கலாம். அவ்வாறு வரும் செல்வத்தை நல்லோர்கள் சிறந்ததாகக் கருத மாட்டார்கள்.

குறள் எண் : 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
 விளக்கம் :
கொலைத் தொழிலை செய்யும் மக்கள், அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் தாழ்ந்த தொழிலினராகவே தோன்றுவர்.

குறள் எண் : 330
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
 விளக்கம் :
பிணி, வறுமை, போன்ற துயரத்திற்கு இலக்கானவர்களைக் கண்டு, ‘இவர்கள் முற்பிறவியில் உயிர்களைக் கொன்றிருக்க வேண்டும்‘ என்று அறிஞர் கூறுவர்.


                                                                                                                                                 

No comments:

Post a Comment