வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, January 15, 2015

அருள் விளக்கங்கள் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


பழிச்செயல் நீக்கம்:
பிராயச்சித்தம், மேல்பதிவு, அடியோடு அழித்தல் (Expiation, superimposition & dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக்கொள்ள மூன்று வழிகள் உள்ளன. ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரிய நிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் நீங்கும்.

மாசு நீங்கல்:
மனம் மெய்ப்பொருள் தான். ஆதியும் மெய்ப்பொருள் தான். ஆனால் மெய்ப்பொருள் குளத்து நீர் என்றால், மனம் அதில் முகந்த ஒரு குவளை நீர். குவளை நீரில் மாசு படிந்து விடுகிறது. அதைக் குளத்தில் கொட்டி விடுகிறோம். அக்குளத்து நீருக்கு அதனால் மாசு வந்து விடுவதில்லை. அதே குளத்தில் இன்னொரு குவளை நீர் முகந்து கொள்கிறோம். அது போலவே யோகத்திலும் மனமாகிய மாசடைந்த மெய்ப்பொருளை அகண்டாகார மெய்ப் பொருளில் சேர்த்து விடுகிறோம். மனத்தின் மாசு சூனியத்தில் கலந்து சூன்யமாகி விடும். எவ்வளவு பூரணமாகச் சேர்க்கிறோம் என்பதில் தான் துரியாதீதத்தின் வெற்றியும் மன மாசு நீங்கலின் முழுமையும் இருக்கிறது.

மனமும் எண்ணமும்:
மனம் என்கிறோம், எண்ணம் என்கிறோம், இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஏன் அதை எண்ணம் என்று சொல்கின்றோமென்றால் மனம் இயங்கும் போது நான்கு வகைக் கணிப்பாக இயங்குகின்றது - காலமாக, தூரமாக, பருமனாக, வேகமாக. எந்த இயக்கத்திலே, எந்தப் பொருளைப் பற்றி, நினைத்தாலும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கு பரிமாணத்திலே தான் மனம் இயங்குகின்றது. இந்த நான்கு பரிமாணத்தைக் கணக்கிடுவதாலே, *கணக்கிடுதல்* என்ற சொல் எண்ணுதல் என்று வந்து, அந்த எண்ணுதலிருந்து எண்ணம் என்பதாகவே வந்தது. ஆகையினாலே மனத்துக்கு எண்ணம் என்ற பெயரும் உண்டாயிற்று.

மனம்:
நாம் ஆற்றைப் பார்க்கிறோம். ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து ஓர் ஆறு நிரந்தரமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. ஒரு நிமிடத்துக்கு முன்னால் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணீர் இப்போது அந்த இடத்திலே இல்லை. அது போய்விட்டது. புதிதாகத் தான் இப்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், நாம் தொடர்ந்து ஓர் ஆறு இருப்பதாக வைத்துக் கொள்கிறோம். அது போன்றே மனம் என்பது ஓர் இயக்கம். உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிற போது அந்த அலை வந்து கொண்டே இருக்கிறது. அதை எந்தெந்த இடத்தில் பாய்ச்சுகிறாமோ, அந்தப் பாய்ச்சலுக்குத் தக்கவாறு இங்கே பதிவைக் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது.

ஞானம்:
வாழும் முறையானது வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக அமையும் போது துன்பந்தான் வரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்வின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். அன்றாட நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்கு ஏற்பவே அமைத்துக் கொண்டாக வேண்டும். இந்த பொறுப்புணர்ச்சி இயல்பாக மலர உதவுவதே மனவளக்கலை.

அறநெறி:
மிருகங்களைப் போலல்லாது ஒவ்வொரு பொருளுக்கும் சில பல மாற்றங் களைச் செயற்கையாகக் கொடுத்தும், ஏன் கலையழகு கொடுத்தும் கூட, மனிதன் உபயோகிக்க கற்றுக் கொண்டான், பழகிக்கொண்டான். இந்நிலையில் குழப்பம் விளையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கவும், மிருகங்களுக்குத் தேவைப்படாத ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அது தான் அறநெறி. அந்த அறநெறி தான் மனித குலத்தையே காத்து வருகிறது. இந்த அறநெறி அழியாமல் பாதுகாக்க எழுந்தவையே இன்று உலகிலுள்ள மதங்கள் எல்லாம். அவை (1) ஒழுக்கம் (2) கடமை (3) ஈகை என்பனவாகும்.

சொர்க்கம் நரகம்:
பருஉருவம் உடல், நுண்ணுருவம் உயிர், பிரணவ உருவம் சீவகாந்த அலை இம்மூன்றும் அடங்கிய திருவுருவமே மனிதன்.

உடல் வரையிலே எல்லை கட்டி மனித மனம் இயங்கும் போது அதனை நர அகம் என்பார்கள். இங்கு உணர்ச்சிகளே பெருகும். துன்பங்களும் சிக்கல்களுமே வாழ்வில் மிகையாக இருக்கும்.

உயிர் விளக்கம் பெற்றால் உயிரைப் பற்றியும் சீவகாந்தம் பற்றியும் விளக்கம் உண்டாகும். இதனால் தீய வினைப் பதிவுகளைப் பதிவுகளை திருத்தி இன்பமும் அமைதியும் காணலாம். ஆகையால் உயிர் உணர்ந்த அறிவு நிலையை சுவர் அகம் (சொர்க்கம்) என்பார்கள். இந்த அறிவுநிலையில் தான் ஆன்மாவுக்கு பழிச்செயல்பதிவுச் சுமையிலிருந்து விடுதலை கிட்டும். இத்தகைய உயர்நிலை அறிவு, அகத்தவத்தால் தான் கிட்டும்.

அறிவின் வறுமை:
துன்பத்தையே நினைப்பதும் குறைவையே நினைப்பதும் ஒரு ஏழ்மை. இது அறிவினுடைய வறுமையேயாகும்.

இயல்பு:
தேவை, பழக்கம், அறிவு, சந்தர்ப்பம் இவையொக்க செயல், எண்ணம், பேச்சு இவை செயலாகும். இது இயல்பு.

மனம்:
மனம் தான் மனித வாழ்க்கையின் விளை நிலம். மனத்தின் தன்மை எதுவோ அது தான் மனிதனுடைய தன்மை.

குணங்கள்:
தேவையும் பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. அனுபவ நினைவுகளும் சிந்தனையும் தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்கின்ற திறனே 'அறிவு' எனப்படும்.

உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை 'மயக்கம்' அல்லது 'மாயை' என்கிறோம். இந்த நிலையில் தான் பொய், களவு, கொலை, சூது, கற்பழிப்பு என்ற ஐம்பெரும் பழிச்செயல்களும் பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால் கவர்ச்சி, வஞ்சம் ஆகிய ஆறுகுணங்களும் விளைகின்றன. எனவே எண்ணத்தை அடிக்கடி ஆய்ந்து ஒழுங்கு படுத்துவது அவசியமான தாகும்.

பஞ்சாங்கம்:
பஞ்சாங்கம் மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றி கரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல், பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே, வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கிரகணம் என்ற பஞ்ச(ஐந்து) அங்கங்களையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்தார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது. கப்பலும், விமானமும், புகை வண்டியும் நாள், நேரம் பார்த்துப் புறப்பட முடியுமா? காலத்தால் இத்தகைய நம்பிக்கைகள் கரைந்து போகும்.

கோள்களும் நமது உடலும்: 
சூரியனிலிருந்து வருகின்ற அலை எலும்புகளோடும், புதன் தோல் மீதும், வெள்ளி சீவ வித்து சக்தியோடும், சந்திரன் ரத்த  ஓட்டத்தோடும், செவ்வாய் எலும்பிலுள்ள மஜ்ஜையோடும், சனி மூளை செல்களோடும், சனி நரம்புகளோடும், இராகு-கேது மனத்தோடும் தொடர்பு கொள்கின்றன என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இராகு, கேது காந்த அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள இரசாயனமும் வேறுபடும்.  அந்த மாறுதல் ஏற்படும் போது நமது உணவு செரிமானம் குறைவாக இருக்கிறது.  அந்த நேரத்தில் தெய்விக நினைப்பு அல்லது வேறு ஏதாவது சங்கற்பம் செய்வதே நல்லது. அப்படி இல்லாமல் விருப்பம் போல் நடக்கின்ற போது உடலுறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் உருவாகும் குழந்தை கேடுற்ற உடலுல், மனமும் உடையனவாக இருக்கக் கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.  ஆகவே இத்தகு விபத்துக்களைத் தடுப்பதற்காகவே அந்த நாட்களையும் நேரத்தையும் விரத நாட்களாக முன்னோர்கள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்.

கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தி (immunity) அப்படியே காப்பற்றப் படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போலதான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் கெடுதல் இல்லை. தூய்மை வேண்டும் என்று நினைக்கும்போது எதற்குமே குளித்து விட்டுச் செய்வது ஒரு சடங்கு தான்.

ஒழுக்கம்:
பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும், தாழவும் முடியும்.  வாழ்வதற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.

கோபம்:
சினத்தினால் திருத்தம் வரவே வராது. சினத்தினால் ஏதாவது வரும் என்றால் அங்கு வருத்தம் தான் வரும். சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும். முகம் பொலிவாகக் காணப்படும்.

பேராசை:
பேராசை, சினம், கவலை ஆகிய மூன்று வகைகளிலேயே மனிதனின் ஆற்றல் வீணாகச் செலவாகிறது.

கடமை உணர்வு:
நாம் பிறந்தோம். 15 ஆண்டுகள் வரையில் எப்படி வாழ்ந்தோம். சமுதாயத்திலிருந்து ஒரு பெருமளவு பொருளாதாரத்தைப் பெற்றுக் கொண்டு தான் வளர்ந்து வந்துள்ளோம். அவ்வாறு பெற்றுக் கொண்டதால் கடன் பட்டவர்கள் தானே நாம். இத்தனையும் அனுபவித்து அனுபோகித்த பிறகு ஏதேனும் திருப்பித் தந்தோமா? பிறந்த போது ஏதேனும் கொண்டு வந்தோமா கொடுப்பதற்கு? இல்லையே. ஆகவே சமுதாயம் தந்தது தான் எல்லாம். இந்த உடலும் உட்பட.  எனவே சமுதாயத்திற்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். இந்தக் கடனைத் தீர்ப்பது எப்படி?

உடல் வளர்ச்சி பெற்ற பின்னர், அறிவு வளர்ச்சி பெற்றபின் அதே அறிவைக் கொண்டு, வலுவைக் கொண்டு இந்த சமுதாய்த்திற்கு எந்தெந்த அளவிலே நன்மை செய்ய முடியமோ அதை உணர்ந்து நலம் தரத்தக்க வழியிலே செயல் படுத்த வேண்டுமென்று கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற நீதி உணர்வு, அந்த நீதி உணர்வை ஒட்டிய செயல், அந்தச் செயலிலே வரக் கூடிய நல்விளைவு, சிந்தனை, அனுபவங்கள், இதைத்தான் 'கடமை உணர்வு' என்கிறோம்.

பழக்கத்தால் எண்ணம்:
ஒரு செயலில் மனமானது பழகி விட்டால் மீண்டும் தேவை இல்லாதபோது கூட அதையே நாடுகிறது. இது பழக்கத்தால் தோன்றும் எண்ணம்.

தினசரி செய்தித்தாள் படிப்பது ஒரு பழக்கம். ஒரு நாள் செய்தித்தாள் வரத் தாமதமாகி விட்டால் மற்றப் பணிகளை மறந்து அதே நினைவாகச் செய்திதாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பது பழக்கத்தால் தோன்றும் எண்ணமாகும்.

தேர்வுக்காகப் படிக்கும் காலங்களிலும் தொலைக்காட்சித் தொடரை விடாமல் பார்க்க வேண்டும் என்பதும் பழக்கத்தின் காரணமாகும்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்டு பழகியவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மணியைப் பார்த்தவுடனே பசி இல்லாவிட்டாலும் கூட சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழுவது பழக்கத்தின் காரணமாகும்.

இவற்றை அனுமதிக்கலாமா? நிறைவு செய்யலாமா? விளைவு என்னவாகும்? என்று ஆராய்ந்து பார்த்துச் சரியான முடிவு எடுக்க வேண்டும்.

அன்பும் கருணையும்:
இயற்கையின் திருவிளையாடல்களால் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்திலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாத நியதியாக அமைந்திருக்கும் அன்பையும் கருணையையும் அந்தத் தோற்றங்களில் ஒன்றான மனிதனானவன் உணர்ந்து தன்வாழ்விலும் செயல்களிலும் பின்பற்றி வாழ்வதே இறைவழிபாடு ஆகும்.

அன்பும் கருணையும் என்ற மாயக் கயிறு தான் தெய்வ நிலையையும் எல்லா பொருட்களையும், உயிர்களையும், மனிதர்களையும் வழிநடத்திக் கொண்டு  
இருக்கின்றது. இதனை உணர்ந்து நடந்து கொள்வதற்கு வாய்ப்பான ஆறாவது அறிவு மனிதனுக்கு அமைந்திருக்கிறது. இந்தப் பெருநிதியை மனிதன் அறிந்து கொள்ளாமலோ, அலட்சியப் படுத்தியோ, உணர்ச்சி வயப்பட்டோ, வாழ முற்பட்டால் கயிறு அறுந்த காற்றாடியைப் போல், நெறி பிறழ்ந்த வாழ்வு வாழ்ந்து மனிதன் துன்பங்களை ஏற்க வேண்டிவரும்.

எனவே அன்பும் கருணையும் மனித வாழ்வுக்கு இன்ப ஊற்று என உணர்ந்த விழிப்புடன் வாழ்ந்தால், இன்முகமும் இனிய சொல்லும் உதவும் கரங்களும் வெற்றி வாழ்வும் உருவாகும்.

பேரியக்க மண்டலம்:
மரம் என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்துணர்வால் அடித்தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் என்ற பல பெயரால் அழைக்கிறோம். இவையெல்லாம் மரம் என்ற ஒரே தோற்றத்தின் உறுப்புகளேயாகும். அவையனைத்தையும் சேர்த்து முழுமையாக ஒரு சொல்லில் கூறும்போது மரம் என்று கூறுகிறோம்.

இதே போன்று அணுக்கள், பஞ்சபூதம், கோள்கள், சூரியன், உலகம், உயிர்கள் என்று கூறுவதெல்லாம் ஒரே ஒரு இறைநிலையின் தன்மாற்றத்தால் மலர்ந்துள்ள பேரியக்க மண்டலத்தின் கூறுகளேயாகும்.

இந்தப் பெரு மண்டலத்தின் தோற்றங்களையும் ஆற்றல்களையும் புலன்களால் தனித்தனியே எல்லை கட்டியும், அவற்றுக்குத் தனித்தனியே பெயர் வைத்தும் அழைப்பது மனிதனிடம் அமைந்துள்ள ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும்.

காந்தம்:
காந்தம் தற்சுழற்சியுடைய இறைத்துகளே காந்தம். பிரபஞ்சம் முழுவதும் இறைத்துகள்கள் நிரம்பி இயங்குகின்றன. எனவே இத்தகைய ஆற்றலை ஆங்கிலத்தில் 'மேக்நெட்' (Mag+net = magnet) என்று கூறுகிறார்கள். மேக் (mag) என்றால் 'மகா' அதாவது 'பெரிய' என்ற கருத்தாகும். நெட் என்றால் வலை. காந்தம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றிணைத்துப் பின்னிக்கொண்டும், சூழ்ந்தழுத்தி இயக்கிக் கொண்டும் இருக்கின்ற ஒரு 'பெரியவலை' என்பதாகும்.

தாலியின் தத்துவம்:
தொடக்கத்தில் மனிதன் மலையிலேதான் வாழ்ந்து வந்தான். மலை கரைந்து காடாகி, காடு சமவெளியாகி, பயிரிடக் கூடிய நிலமாகியது. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம் என்று முன்று நிலமாகியது. மலையில் வாழும் ஆண்மகன் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பெண்ணைப் பாதுகாக்கக்கூடிய உடல் வலிவு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒருமுறை வைத்தார்கள்.

கொடிய விலங்கு ஒன்றை வென்று அதனுடைய 'பல்' ஒன்றைக் காண்பித்து சான்றிதழ் வாங்க வேண்டும். அவ்வாறு கொண்டு வந்து காண்பித்த பல்லிலே ஒரு கயிற்றைக் கட்டி, பெண்ணின் கழுத்தில் தாலியாகக் கட்டுவது என்றாகியது. இப்போது புலிப் பல் தேடும் காலம் போய் புலிப் பல்லைப் போலவே இரண்டு நாக்கு வைத்து தங்கத்தால் செய்த ஒரு சின்னத்தைக் கட்டலாயினர். இதைத் தான் இப்பொழுது தாலி என வழங்குகிறோம்.

வடநாட்டுத் தாலி எப்படி என்றால் யுத்தங்கள் அதிகமாக இருந்ததால் கலவரத்தில் பெண்களைச் சூறையாடும் வெறி இருந்தது. பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வசதியாகத் தாலியின் உள்ளே 'விஷம்' வைத்து வாய்க்கு எட்டும் தூரத்தில் தொங்க விட்டார்கள். பிற்காலத்தில் கணவன் மனைவிக்குள் பிணக்கு சச்சரவு வரும் போது சாப்பிட ஆரம்பித்ததால், விஷம் நிறுத்தப் பட்டு, அரக்கு வைக்கப்படுகிறது.


இப்படி சடங்குகளை அலசிப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு கால கட்டத்தில் அவசியமானதென்று தெரிய வருகிறது. தற்காலத்திற்கு தேவையில்லை யெனில் அவற்றை தள்ளிவிட்டு மனித சமுதாயம் முன்னேற வேண்டும். அதற்கு விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்.

மெய்யுணர்வு:
Intuition என்பது நீ பேசாதபோது இறைவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்பார்கள். நீங்கள் வளவள என்று பேசிக் கொண்டே இருந்தால் அங்கே உள்ளேயிருந்து வரக் கூடிய நுண்மையான விளக்கமோ அல்லது அறிவுரையோ எப்படித் தெரியும்? டமாரம் அடிக்கிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தால் ஒருவர் பேசுவது நமக்கு காது கேட்பதில்லையல்லவா? அது போல, ஐயுணர்வைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, முறைப்படுத்தி திட்டமிட்டு ஒரு அளவில் வைத்துக் கொள்வோமேயானால் அங்கு தான் மெய்யுணர்வு ஏற்படும்.

உயிர்ச் சக்தியின் பெருமை:
உயிர்ச்சக்தியின் குறைவினாலேயே வலி, நோய், மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகவே, நாம் நலமாக இருக்க வேண்டுமானால் உயிர்ச் சக்தியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உயிர்ச்சக்தி உடலிலே சரியாக இருக்க வேண்டுமானால், அதைத் தாங்கக் கூடிய சக்தி அதாவது வித்து சக்தியானது போதிய அளவிலேயும் போதிய அழுத்தத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரத்திற்கு மின்கலம் (battery) மாதிரி இருக்கக்கூடியது இந்த வித்து சக்தி. அதையே ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சீவவித்துக்குழம்பு (sexual vital fluid) என்கிறோம். அதை நாம் எந்த அளவு பாதுகாத்து, எந்த அளவு சரியான முறையிலே நாம் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிலே உயிர்ச் சக்தியும் இருக்கும். (the quantity and quality of the life force is what the quantity and quality of sexual vital fluid).

உயிர்ச்சக்தியும், வித்துச் சக்தியும் எவ்வளவில் இருக்கின்றதோ, அது போலவே வாழ்க்கையின் உடல்நலம், மனநலம் அமையும்.

மதங்களின் நோக்கம்:
மதத்தை ஒரு பறவையாக பாவித்துக் கொண்டோமானால் அதற்கு இரண்டு இறக்கைகள்: ஒரு இறக்கை இறைவழிபாடு, இன்னொரு இறக்கை உயிர்வழிபாடு.

இறைவழிபாடு தான் அறிவின் வழிபாடு. அறிவை உயர்த்திக் கொண்டு முழுமை பெற்று, அவனோடு தானும் ஒன்றாகி நிற்பதற்குரியது இறை வழிபாடு. இதன் மூன்றும் அம்சங்கள் பக்தி, தன்னிலை விளக்கம், முழுமைப் பேறு என்பன.

உயிர்வழிபாட்டைத் தான் அறநெறி என்கிறோம். அதன் மூன்று அம்சங்கள் ஒழுக்கம், கடமை, ஈகை என்பன.

உலகில் தோன்றிய எல்லா மதங்களின் அடிப்படைக் கருத்துக்களும் இறை வழிபாடு மற்றும் உயிர்வழிபாடு என்பதே.

தவப்பலன்கள்:
தவத்தின்போது புலன்களின் இயக்கம் வெகுவாகக் குறைந்து விடுவதாலும், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனத்தை ஒருமுகப்படுத்துவ தாலும், நமது உயிராற்றலின் செலவு தவிர்க்கப்படுகிறது. ஆற்றல் சேமிக்கப் படுகிறது.

எடுத்துக்காட்டாக, தண்ணீரை ஒரு தொட்டியில் வைத்து கீழே நெருப்பு மூட்டிக் காய்ச்சினால், நீராவியாகி மேலே வெளியேறும். நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால், தொட்டியில் கால் பகுதிதான் நீர் இருக்கும். அதற்குப் பதிலாக, தொட்டிக்கு மேலே ஒரு மூடிபோட்டு, அந்த நீராவியைக் குழாய் மூலமாக மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்று, குளிரச் செய்து, நீராக மாற்றி, மீண்டும் குழாய் மூல்மாக, இத்தண்ணீரைக் கொண்டு வந்து தொட்டியில் வந்து விடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது நான்கு மணி நேரம் நீர் கொதித்துக் கொண்டிருந்தாலும், முன்னே தண்ணீர் செலவாகிக் கொண்டிருந்த அளவு தண்ணீர் செலவாகாது. சிறிது செலவானாலும், மிச்சமெல்லாம் சேமிக்கப்படும்.

அதே போன்று ஐம்புலன்கள் மூலமும் சிந்தனையின் மூலமும் ஓடிக் கொண்டிருக்கின்ற நமது மனத்தை, சீவகாந்தத்தை, உள்ளே இருக்கின்ற உயிரின் மீது செலுத்தி தவம் செய்யும் பொழுது மீண்டும் ஆற்றல் சேமிக்கப் படுகிறது.


- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment