வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, May 27, 2015

அருள் விளக்கங்கள்                                                        





{ நமக்குள் உள்ள 6 ஆதாரங்கள் பற்றி சித்தர்களால் உலகுக்கு அளிக்க பட்ட உண்மைகளும் அவற்றின் கட்டமைப்புகளும் . }
குண்டலினி - மூலாதாரம்.
------------------------------------------
மூலாதாரம் என்பது கருவாய்க்கும்,
எருவாய்க்கும் இடையே இருப்பதாக முன்னரே
பார்த்தோம். சித்தர்கள் இந்த மூலாதாரத்தின்
இடத்தினை மிகத் தெளிவாக
விளக்கியிருக்கின்றனர்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் பின்
வருமாறு விளக்குகிறார்....
நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே
- திருமூலர்.
போகரும் தனது போகர் ஏழாயிரம் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்...
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பார்
அதிலே யோர்கோணத் திலுகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கிய தோர்முனை யொன்றில்
கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்க் குண்டலியாம் சக்தி
பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையூ டுருவி நிற்பாள்
துரியாதீ தம்மென்ற வவத்தை தானே
- போகர்.
மூலாதாரச் சக்கரமானது பிறப்பு
உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட
பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை,
சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும்
இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக
சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு
விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு
விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை
அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம்
இருக்கின்றது.
உடலில் இருக்கும் மற்றச் சக்கரங்களைத்
தாங்குவதால் இதனை ஆதார சக்கரம்
என்கின்றனர். அதாவது மற்றச் சக்கரங்களுக்கு
தேவையான சக்தியைத் தரக் கூடிய
குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு
படுத்துள்ளது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு
முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன.
அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல்
தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச
ஷ" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மூலாதார சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த நான்கு எழுத்துக்களும் முறையே மனம்,
புத்தி, சித்தம், அகங்காரம் குறிக்கிறது
என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
இச்சகக்கரத்தின் மத்தியிலுள்ள யோனிக்கு
“காமம்”என்று பெயர். அதையே சித்தர்கள்
தொழுகிறார்கள். இங்குதான் குண்டலினி
தூங்குவது போல் அசைவற்றுக் கிடக்கிறது.
இச்சக்கரத்தின் அதிதேவன் வினாயகர்,
அதிதேவதை டாகினி/தாகினி என்று
குறிப்பிடப்படுகிறது. இந்த மூலாதார
சக்கரத்தின் பீஜ மந்திரமாக "லம்" என்பது
குறிப்பிடப்படுகின்றது.
பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி இந்த்
சக்கரத்தின் மூலக்கூறாக கூறப் படுகிறது.
சிறுநீரகம் தொடர்புடைய உறுப்பாக
கூறப்படுகிறது.
குருவருளின் துனையோடும்,
வழிகாட்டுதலோடும் தனிமையான இடத்தில்
அமர்ந்து மூலாதார சக்கரத்தை மனதில்
நிறுத்தி மூல மந்திரத்தை உருவேற்றிட
குண்டலினி விழித்துக் கொள்ளும். இதனை
தன் உணர்வுகளால் மட்டுமே அறிய
முடியும். மூலாதாரத்தில் வெப்பம்
உருவாவது, மூலாதாரத்தில் பரபரவென
எதோவொன்று ஊறும் உணர்வு, உடல்
புல்லரித்தல் போன்ற அனுபவங்களை நான்
உணர்ந்திருக்கிறேன்.
குண்டலினி விழித்துக் கொண்டவர்களுக்கு
கடுமையான பசியும், அதிக தூக்கமும்
உண்டாகும்.
குண்டலினி - சுவாதிஷ்டானம்.
-----------------------------------------------
குண்டலினி பயிற்சியில் இரண்டாவது சக்தி
ஆதார மையமான சுவாதிஷ்டானம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு “நிராகுலம்”
என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம்
என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது
என பொருள்படும்.
மூலாதாரத்திற்கு மேலே இருக்கும்
இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது
பிறப்பு உறுப்பிற்கு மேலே இது
இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில்
இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே
இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த
சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான
"சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான
"ந" என்னும் எழுத்தையும்,அதன்
தத்துவத்தையும் விளக்குவதாக
அமைகின்றது.
இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள்
வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின்
ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி
இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம்,
ய, ர, ல" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில்
வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப்
படுகிறது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
சுவாதிஷ்டான சக்கரத்தின் மாதிரி படம் இது.
சுவாதிஷ்டானத்தின் அதிதேவன் பிரம்ம
தேவர். அதிதேவதை ராகிணி/சாகிணி. பஞ்ச
பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக
கூறப்பட்டிருக்கிறது. சுவாதிஷ்டானமானது
நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல்
ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.
சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் “வம்”
என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில்
இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர
குண்டலினி இந்த மையத்தை அடையும். இது
விடாத தொடர் முயற்சி மற்றும்
பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும்
ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர்.
குண்டலினி சக்தியை பெண் அம்சமாக
அதாவது வாலையின் அம்சமாய்
உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே
குண்டலினி சக்தி பாயும் போது அவை
பூரணத்துவம் அடைந்து மலர்வதே
சித்தியடைதல் எனப் படுகிறது.
இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய
கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு
விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது
எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த
விஷயங்களின் மீதான மேம்பட்ட
பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப்
படுவது அவசியமாகிறது.
குண்டலினி - மணிபூரகச் சக்கரம்.
---------------------------------------------------
மூன்றாவது சக்தி ஆதார மையமான
மணிப்பூரக சக்கரம் பற்றி இன்று பார்ப்போம்.
தாயின் வயிற்றில் இருந்து பிறந்த உடன்
நம்முடைய உடலில் ஒரு முடிச்சு இடப்
படுகிறது. அது தொப்புள் கொடியாகும்.
இந்த உடல் உருவாகி, உயிராகத் தேவையான
பிராணன் இந்த கொடியின் வழியேதான்
நமக்குள் அடைக்கப் படுகிறது என சித்தர்
பெருமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு
அடைக்கப் பட்ட பிராணன் தொப்புளைச் சுற்றி
குடி கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
இந்த சக்தி மையத்தையே நாம் மணிப்பூரகம்
என்கிறோம். இது சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது. இது நமது வயிறு,
சிறுகுடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற
உறுப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்
படுகிறது. இதன் மூலக்கூறு நெருப்பு
ஆகும். மணிப்பூரகத்தில் தகித்துக்
கொண்டிருக்கும் இந்த நெருப்பு மங்கி
அணையும் போதுதான் நம் உடல் நோய்வாய்ப்
பட்டு பலவீனம் அடைந்து பின்னர் உயிர்
பிரிவதாகவும் ஒரு கருத்தாக்கம்
கூறப்பட்டிருக்கிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன்
அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட,
ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால்
குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின்
அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/
லாகிணி. இதற்கான மூல மந்திரம் “ரம்”
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மணிபூரகச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
மணிப்பூரக சக்கரத்தின் நடுவே முக்கோண
வடிவம் ஒன்று உள்ளது. இது நெருப்பினை
அடையாளப் படுத்துகிறது. இந்த
சக்கரமானது “சிவயநம” என்னும்
எழுத்துக்களில் ஒன்றான “ம்” என்பதன்
தத்துவத்தை விளக்குவதாக
அமைந்திருக்கிறது.
மணிப்பூரகத்தை மனதில் இருத்தி, இதன்
மூல மந்திரத்தினை உருவேற்ற
சுவாதிஷ்டானத்திலிருந்து
குண்டலினியானது எழும்பி மணிப்பூரகத்தை
வந்தடையுமாம். இது மிகக் கடுமையான
பயிற்சி மற்றும் முயற்சியினால் மட்டுமே
சாத்தியமாகும்.
முறையான பயிற்சி மற்றும் அனுபவம்
வாய்ந்த குருவின் வழிகாட்டுதல்
இல்லையெனில் இந்த நிலையை தாண்டுவது
மிகக் கடினம். ஏனெனில் முறையற்ற பயிற்சி
உடலில் தேவையற்ற பக்க விளைவுகளை
உருவாக்கிடும். இதை என்னுடைய சொந்த
அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். எனவே
தக்க வழிகாட்டுதலுடன் பயில
வேண்டுகிறேன். இதனை ஒரு எச்சரிக்கையாக
எடுத்துக் கொண்டாலும் சரிதான்.
முறையாக பயிற்சி செய்து
சுவாதிஷ்டானத்தில் மலர்ந்திருக்கும்
குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தால்,
நமது உயிர் சக்தி தூண்டப் பட்டு உடலின்
உறுதி மற்றும் உடல் நலம் மேம்படும்.
இத்தகைய சக்கரம் தூண்டப் பட்டவர்கள்
கடுமையான உழைப்புக்கும்
அஞ்சாதவர்களாய் மாறிவிடுவர்.
குண்டலினி - அனாகதம்.
---------------------------------------
நமது உடலில் இருக்கும் நான்காவது ஆதார
சக்கரமான அனாகதம் பற்றி இன்று பார்ப்போம்.
அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது
உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்.
இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு
கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும்
நடுவில் சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா
னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றிநிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில்
ருத்ரன்காகினிதானே.
-அகத்தியர்.
இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு
தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன்
மூலக்கூறு காற்று. அதிதேவன் ருத்ரன்,
அதிதேவதை காகினி. இதன் மூல மந்திரம்
“யம்” என்பதாகும். இந்த சக்கரமானது
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக அமைகின்றது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
அனாகதச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக
நாடிகள் தாமரை இதழ் போல வெளிக்
கிளம்புகின்றன. இவற்றின் அசைவுகளால்
உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள்
பின் வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர்.
அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச என்பதாகும்.
சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின்
நாதமான, அனாகத சப்தம் கேட்கும்.
அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி
மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர
மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி
எழும்பி, அனாகதம் வந்தடையும். இந்த சித்தி
சில நாட்களிலும் வாய்க்கும், சமயங்களில்
சில வருடங்கள் கூட ஆகலாம். இது முழுக்க
சாதகனின் பொறுமை மற்றும் கவனக்
குவிப்பை பொறுத்தது.
மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட
குண்டலினியானது அனாகத சக்கரத்தை
வந்தடையும் போது அதற்கு “அக்கினி
குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி
அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில்,
சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு,
இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள்
மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும்
புரியவரும்.
குண்டலினி - விசுத்தி.
--------------------------------
மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான
விசுத்தி பற்றி இன்று பார்ப்போம்.
இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.
- அகத்தியர்.
இந்த சக்தி ஆதார மையமானது நமது
தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை
நாடியில் அமைந்து இருப்பதாக
குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை,
மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள்,
நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன்
விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக
குறிப்பிடப் படுகிறது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும்
எழுத்தையும், அதன் தத்துவத்தையும்
விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது.
இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி
தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான
ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல
மந்திரம் “ஹம்” எனப்படுகிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன.
அவற்றின் அசைவுகளால் ஏற்படும்
சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ,
அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின்
எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி
இருக்கிறது. இந்த தொடரின் முடிவில் அது
என்ன என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
விசுத்திச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத
சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி
குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி
சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை
“ஆகாச தாரணை” என்கின்றனர் சித்தர்
பெருமக்கள்.
இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை
உருவாக்கும் அல்லது விளைவிக்கும்
எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை
விட்டு நீங்கிடும். இதனால் எதனையும்
விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ
இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க
முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து
அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான்
என்கின்றனர்.
இதுவரை நாம் பார்த்த இந்த ஐந்து
சக்கரங்களும் ஆகாச தத்துவ ஞானம் என்ற
வகையில் அடங்கும். இதற்குமேல் வரும்
மற்ற இரண்டு சக்கரங்களும் மனஸ தத்துவ
வகையை சார்ந்தவை.
குண்டலினி - ஆக்ஞா.
----------------------------------
மூலாதாரத்திலிருந்து ஆறாவது சக்தி ஆதார
மையமாய் குறிக்கப்படும் ஆக்ஞா சக்கரம்
பற்றி இன்று பார்ப்போம்.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
ஆள்வாயே யாதாரஞ் சொச்சங்கேளு
அருளினோம் விசுத்தி யாக்கினையைகேளு
பாள்வாயே இதற்க்குமேல்
பதினாறங்குலந்தான்
பாலகனே கண்டமார் புருவமாகும்
மாள்வாயே மளவாகி யளவாக்லோங்கி
மகத்தான யிரண்டிதளாய் பிரிந்தே நிற்கும்
யேள்வாயே வட்சரந்தான் னிரண்டதாகும்
இதனடுவில் யகார மாக்கினை வீடாமே.
- அகத்தியர்.
இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக
மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்
படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில்
நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு
இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்"
என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற
சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில்
அமைந்துள்ளது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "ய" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக இது அமைகின்றது. இதன்
மூலக்கூறு நெருப்பு. கண்கள், நெற்றி
போன்றவை தொடர்புடைய உறுப்புகளாகும்.
அக்ஞா சக்கரத்தில் இரண்டு தாமரை
இதழ்களை போல் இருபக்கமும் எதிரெதிரே
இரண்டு யோக நாடிகள் உள்ளன. இவற்றை
சூரிய சந்திர அம்சமாக உருவகம்
செய்திருக்கின்றனர். இதன் அசைவுகளால்
ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற
எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
ஆக்ஞா சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தின் அதிதேவன் பரமசிவன், அதி
தேவதை வாகினி. மூல மந்திரம் "ஓம்".
அக்ஞா சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தை உருவேற்றி வர விசுத்தி
சக்கரத்தில் இருக்கும் குண்டலினியானது
மேலேறி அக்ஞா சக்கரத்தை வந்தடையும்.
ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண்
திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின்
கவனக்குவிப்பு, விழிப்புணர்வு,
நினைவாற்றல் போன்றவை பல மடங்கு
அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம்
தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை
இது.
குண்டலினி - துரியம்.
----------------------------------
மூலாதாரத்தில் துவங்குகிற குண்டலினியின்
பயணத்தின் உச்ச நிலையான துரியம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு சகஸ்ரதளம்
என்கிற மற்றொரு பெயரும் உண்டு.
மூலாதாரத்தில் இருந்து விழித்தெழுந்த
குண்டலினி அனாகத சக்கரத்தை அடையும்
போது அதனை அக்னி குண்டலினி என்றும்,
அனாகதத்தில் இருந்து எழுந்து மேலேறி
ஆக்ஞா சக்கரத்தை மலர்த்திய நிலையில்
அதனை சூரிய குண்டலினி என்றும், ஆக்ஞா
சக்கரத்தை கடந்து துரியத்தை நோக்கி
பயணிக்கும் போது அதனை சந்திர
குண்டலினி என்றும், துரியம் மலர்ந்த
நிலையில் அதனை துரிய குண்டலினி
என்றும் அழைக்கின்றனர்.
துரியம் பற்றி போகர் பின் வருமாறு
விளக்குகிறார்.
தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால்
தனிததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபத்ந்தான் கூடிப்பாரு
குறிப்பான இதழ்தான் ஓர்ஆயியிரதெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோணமாகும்
அகாரமொடு உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும்
நலத்தஐங் கோணத்தில் நிற்கும்பாரே .
- போகர்.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை
மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி
ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது
மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக
கூறப்பட்டிருக்கிறது.இந்த சக்கரமானது
ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரை
போன்றது என்கின்றனர்.அதாவது ஆயிரம்
யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து
வெளிக் கிளம்புகின்றன.
போகர் தனது பாடலில் விவரித்திருக்கும்
துரிய சக்கரத்தின் மாதிரி படம் இது.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துரிய நிலைக்கு
குண்டலினியை எழுப்புவது என்பது
குண்டலினி யோகத்தின் மிக உயரிய
செயல்பாடு. இதற்கென பிரத்யேக பயிற்சிகள்
கூறப் பட்டிருக்கின்றன. அவ்வாறு உயர்த்தப்
பட்ட சந்திர குண்டலினி மலர்த்திய
துரியசக்கரம் தரும் அனுபவத்தை நம் போன்ற
சாமான்யர்களின் வார்த்தைகளால் விவரிக்க
இயலாது. பரவச நிலை என்பதே நமது ஆகக்
கூடிய வ்ருணனையாக இருக்கும்.
கவனத்தை குவித்து, அந்த கவனத்தையே
கவனிக்கிற பயிற்சியின் உச்சத்தில் அந்த
கவனமே கரைந்து போய்விட்டால்.....
சித்தர்களோ இதனை நிலையற்ற நிலை
என்கின்றனர். அதாவது நம்முடைய விழிப்பு
நிலை, கனவு நிலை, முழுமை நிலை என்கிற
மூன்றும் ஒன்றில் ஒன்றாய் குவிந்து,
கரைந்து போகிற நான்காவது பரவச நிலை.
இந்த நிலையில் தானே தேடுகிறவனாகவும்,
தானே தேடலாகவும், தானே தேடு
பொருளாகவும் இருப்பதையே துரிய நிலை
அல்லது சமாதி நிலையாக சித்தர் பெருமக்கள்
குறிப்பிடுகின்றனர்.
ஔவையாரும் கூட இந்த அனுபவத்தை
இப்படி கூறுகிறார்....
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!
---------------------------------------------------------
குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு
சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை
இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப்
பற்றி பார்த்தோம்.
இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை
தொடரின் இறுதியில் பகிர்வதாக
கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த
குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன்.
நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு
மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....
குண்டலினி யோகத்தின் போது
மூலாதாரத்தில் நான்கு இதழ்களும்,
சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்;
மணிபூரகத்தில் பத்து இதழ்களும்,
அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும்,
விசுத்தியில் பதினாறு இதழ்களும்,
ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக்
கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள்
அதிரும் போது ஒலி உருவாவதையும்
பார்த்தோம்.
சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது
மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும்
கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு
தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது.
”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச்
சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த
எழுத்துக்களே விளங்குகிறது.
அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார்,
சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர்
பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று
எழுத்த்துக்களின் மகத்துவத்தை
பாடியுள்ளனர்.
திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும்
நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"
- திருமூலர்.
மேலும் திருமூலரே தனது திருமந்திரம்
என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும்
அமர்ந்ததே.
- திருமூலர்.
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில்
பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அகர முதலென உரைசெய்
ஐம்பத்தோரட்சரமும்"
-அருணகிரிநாதர்.
இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின்
பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக்
காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த
ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக
முக்கியமானதாகவும், உயர்
தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் குண்டலினிக்கு
வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு
முக்கிய ஆதாரங்களில் இருந்து
வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால்
ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக
குறித்திருப்பது உங்களுக்கு இப்போது
நினைவுக்கு வரலாம்.
நண்பர்களே, குண்டலினி யோகத்தில்
ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும்
போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும்
ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர
எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும்
ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது
எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும்
போது உருவாகும் உருவாகும்
பேசாமொழியான ஓரெழுத்தும் சேர
ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த
பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு
ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை
நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.
வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது.
இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள்
தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து
பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும்
என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை
மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில்
உழன்று கொண்டிருக்கிறோம்.
குண்டலினி என்கிற மகா சமுத்திரத்தில் நான்
உணர்ந்த ஒன்றிரண்டு துளிகளை மட்டுமே
இதுவரை உங்களோடு
பகிர்ந்திருக்கிறேன்.இந்த தொடரில்
பிழையேதும் இருப்பின் அதைப் பொறுத்து
என்னை திருத்திட வேண்டுகிறேன்.
குண்டலினி பற்றி ஒருவர் முழுமையாக
அறியவும், புரியவும் பல காலம் பிடிக்கும்.
தொடர்ச்சியான தேடுதல் மட்டுமே நம்மை
சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.
எதிர்காலத்தில் குருவருள்
அனுமதிக்குமானால் இந்த தொடரின்
இரண்டாம் பகுதியாக இதனுள்
உறைந்திருக்கும் நுட்பங்களையும் அதனை
கையாளும் வகைகளையும் பகிர்ந்திட
முயற்சிக்கிறேன். இனிவரும் நாட்களில் இந்த
தொடரினை மின்னூலாக்கி இங்கே பொதுவில்
பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லாம் வல்ல குருநாதரின் அருளினாலே
இது சாத்தியமாயிற்று. அவரின் பாத
கமலத்தில் இந்த முயற்சியை சமர்ப்பித்து
பாகத்தை நிறைவு செய்கிறேன.

No comments:

Post a Comment